×

கேரளாவில் ரூ.100 கோடி மோசடி... கிரிப்டோகரன்சியை தடை செய்க - ஹைகோர்ட்டில் வழக்கு!

 

தொழில்நுட்பம் வானளவு வளர்ந்து நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில், முதலீடு செய்யும் வழிகளும் முறைகளும் மாறியுள்ளன. அந்த வரிசையில் கிரிப்டோகரன்சி எனப்படும் கண்களுக்கு புலப்படாத டிஜிட்டல் பணத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆரம்பத்தில் இதன் மீதான நம்பகத்தன்மையால் பெரும்பாலான இந்தியர்கள் முதலீடு செய்ய தயங்கினார். ஆனால் அது கொடுத்த பன்மடங்கு லாபம் சாமன்யர்களையும் அதை நோக்கி இழுத்து வந்திருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் வருகையால் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.

விஷயம் இப்படியிருக்க மத்திய அரசு கிரிப்டோகரன்சியை தடை செய்யும் பொருட்டு புதிய மசோதாவை கொண்டுவரவிருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த மார்கெட் திடீரென வீழ்ச்சியைச் சந்தித்தது. விவகாரம் பூதாகரமான உடனே மத்திய நிதியமைச்சகம் தரப்பில், தடை செய்யப்படப் போவதில்லை; ஒழுங்குப்படுத்துவதற்காகவே புதிய மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் ஆகியவற்றை இந்தியாவின் நாணயமாக அங்கீகரிக்கும் எண்ணமும் இல்லை திட்டவட்டமாகக் கூறியது. 

இதனை மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெளிவுப்படுத்தினார். இச்சூழலில் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெல்லை அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், உரிய விதிகள் வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் ரூ.100 கோடி வரை மோசம் செய்ததாகவும், 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.