×

ஆன்லைனுக்கு குட் பை... இனி வாரத்தின் 6 நாட்களும் நேரடி வகுப்புகள் தான்!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும் முதல் அலை ஓய்ந்த பிறகு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் கல்லூரிகள் ஒருசில நாட்கள் இயங்கின. ஆனால் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை வந்ததால், மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டன.

இதனால் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இரண்டாம் அலை ஜூலை மாதம் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு 50 சதவீத சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது பாதி பேர் ஆன்லைன் வழியாகவும், மீதமுள்ளவர்கள் நேரடி வகுப்பிலும் கலந்துகொண்டனர்.

முகக்கவசம் அணிதல், ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் முதலமாண்டுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இவர்களுக்கும் அதே நடைமுறை தான் தொடர்ந்தது. 

ஆனால் தற்போது சுழற்சி முறை இல்லாமல் அனைவருக்கும் நேரடி வகுப்பு நடத்த வேண்டும் என உயர்க்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இனி ஆன்லைன் வகுப்புகள் நடக்காது. ஜனவரி 20ஆம் தேதி முதல் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடக்கப்போகிறது. ஆகவே அதற்கு முன்னதாக முன்மாதிரி தேர்வுகள் நடத்துவதற்காக அனைவருக்கும் நேரடி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.