தவெக வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
செய்யாறு அருகே த.வெ.க.வேட்பாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதி சேர்ந்தவர் உதயகுமார். இவர் அக்கட்சியில் மாவட்ட கழக செயலாளராகவும், வந்தவாசி தொகுதியின் த.வெ.க கட்சியின் வேட்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று வந்தவாசியில் தேர்தல் பிரச்சாரம் முடித்துக் கொண்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நள்ளிரவு 3 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் தீயை அணைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து உதயகுமார் தனது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றது குறித்து அனக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினருக்கும் த.வெ. காவினருக்கும் வாக்குவாதம் மேற்பட்டதாக கூறப்படுகிறது. செய்யாறு அருகே நள்ளிரவில் த.வெ.க வேட்பாளரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.