×

காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு - காவலா்கள் மாற்றம்

 

நெல்லை ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் முறையாக தகவல் தெரிவிக்காத உளவு பிரிவு காவலர் உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


நெல்லையிலிருந்து  சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ராமையன்பட்டி பகுதியில் மானூர் புற காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுழற்சி முறையில் 5க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மே18 இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் அமர்ந்து இந்த பகுதியில் புற காவல் நிலைய செக் போஸ்ட்டை கடக்க முயன்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி விசாரணை செய்து மறுநாள் காலையில் காலையில் பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு விசாரணை செய்ய வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மது போதையில் இருந்த  3 சிறுவர்களும் மீண்டும் சிறிது நேரத்தில் அதே பகுதிக்கு வந்து பெட்ரோல் குண்டை நிலையத்தில் வீசி சென்றனர்.  அடுத்த நாள் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டை வீசியது நாங்கள் தான் என ராமையன்பட்டி மற்றும் கண்டிகைப்பேரி பகுதியைச் சார்ந்த 3 சிறுவர்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதன்பின் மானூர் காவல்துறையினர் 3 சிறார்கள் மீது 5 பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 


இந்த விவகாரம் தொடர்பாக ராமையன்பட்டி புற காவல் நிலையத்தில் அன்று இரவு பணியில் இருந்த காவலர்கள் சுடலை கண்ணு, ஆனந்த பாண்டி இருவரும் முறையாக இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். மேலும் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உளவு பிரிவு காவலராக பணியாற்றும் அந்தோணி என்பவருக்கு இந்த தகவலே தெரியாமல் இருந்திருக்கிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் விசாரணை செய்து சம்பவம் குறித்து முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்த உளவு பிரிவு காவலர் உட்பட 3 காவலர்களையும் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.