கள்ளக்குறிச்சியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக எங்கள் பங்க் இருந்தும், ஆட்சியர் அலுவலக வாகனங்களுக்கே எங்களால் பெட்ரோல், டீசல் போட முடியவில்லை.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்குஎவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், மேற்காசியப் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோக சங்கிலியில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியப் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக, பொதுமக்கள் மத்தியில் சில கவலைகள் எழுந்துள்ளன. இதில் குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ஹெச்பி நிறுவன பெட்ரோல் பங்குகளில் மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பங்குகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளது. இதனால், அவசரத் தேவைக்காக பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க் உரிமையாளர் செல்வகுமார் கூறுகையில், எங்களுக்கு எவ்வளவு தேவை இருக்கிறதோ அந்த அளவுக்கு பணத்தை முன்கூட்டியே நாங்கள் செலுத்தியும் கடந்த 15 நாட்களாக எங்களுக்கு பெட்ரோல், டீசல் வரவில்லை. மற்ற நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் தாராளமாக கிடைக்கும்போது, ஹெச்பி நிறுவனத்திற்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை.
நகர்புறங்களில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கிகளின் நிலைமை இப்படி இருக்கும்போது, கிராமப்புறங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக எங்கள் பங்க் இருந்தும், ஆட்சியர் அலுவலக வாகனங்களுக்கே எங்களால் பெட்ரோல், டீசல் போட முடியவில்லை. வாகன ஓட்டிகளிடம் பெட்ரோல், டீசல் இல்லை என்று சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என்பதால் ஸ்டாக் இல்லை என்று நாங்கள் அறிவித்திருக்கிறோம்கடன் வாங்கிதான் தொழில் செய்கிறோம். அக்கடனுக்கு வட்டி கட்டுவதற்கும், பங்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் கஷ்டமாக இருக்கிறது. இதுபற்றி நாங்கள் கேட்கும்போது 10 அல்லது 15 நாட்களுக்குள் பிரச்சனை சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால், அதில் எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு கஷ்டமாக இருக்கிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஒரு பொருளை விற்பனை செய்வதற்கு வாடிக்கையாளர் வரவில்லை என்றுதான் நாம் கவலைப்படுவோம். ஆனால், ஆனால் வாடிக்கையாளர்கள் அதிகளவு வருகின்றபோது அவர்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை என்று சொல்லும்போது தான் வருத்தமாக இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.