தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் இரு ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளும் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளை தேர்தல் முடிந்த பின் நடத்தும்படி ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான டி.பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கமான சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என்ற பணிகளுடன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பும், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை உறுதி செய்ய ஆதரவாளர்களை மைதானத்திற்குள் களம் இறக்க வாய்ப்புள்ளதால், மைதானத்திற்குள் மோதல்களுக்கு வழி வகுக்கக்கூடும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். அதனால், சென்னையில் நடைபெறும் இரு போட்டிகளை, தேர்தல் முடிந்த பிறகு வேறு தேதிகளில் மாற்றி அமைக்கும்படி போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இரு போட்டிகளையும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடத்த அனுமதிக்கும்பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், அரசியல் கட்சிகளின் சின்னம், கொடிகளை காட்சிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும்படி ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஏற்கனவே ஒரு போட்டி முடிவடைந்து விட்டது. அப்போது எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. இரண்டாவது போட்டியையும் கண்டு ரசியுங்கள் எனத் தெரிவித்தது. மேலும், வெறும் யூகத்தின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்க இயலாது எனத் தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.