அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! பர்சனல் லோன் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக திடீர் உயர்வு
அரசு ஊழியர்களுக்கான பர்சனல் லோன் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி. க.லதா, ஐ.ஏ.எஸ்., சார்பில் கூடுதல் பதிவாளர் பி.லோகநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சில பணியாளர் கூட்டுறவு வங்கிகள், தனிநபர் கடன் உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்த கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாகவும், நகர கூட்டுறவு வங்கிகளை TANCUBFED கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்த்தல், வளர்ச்சி நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, TANCUBFED கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நாள்:06.10.2026 அன்று அளித்த பரிந்துரையின் அடிப்படையில், CD Ratio-வை உயர்த்தவும், உபரி நிதியினை பயன்படுத்தி கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும், கடன் உச்சவரம்பை ரூ.35 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
புதிய நிபந்தனைகள் என்ன?
1. அதிகபட்ச கடன் உச்சவரம்பு: ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் தொகையானது, அதிகபட்சம் ரூ.35 லட்சம் அல்லது உறுப்பினரின் மொத்த மாத ஊதியத்தின் 25 மடங்கு- இதில் எது குறைவோ, அந்த தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பங்குத்தொகை 5%: உறுப்பினருக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5 சதவீதம் பங்குத்தொகையாக வசூலிக்க வேண்டும்.
3. நிகர ஊதியம் 25% இருக்க வேண்டும்: உறுப்பினரின் மொத்த ஊதியத்திலிருந்து கடன் தவணைகள் உள்ளிட்ட அனைத்து பிடித்தங்களையும் கழித்த பின்னர், அவருக்கு கிடைக்கும் நிகர ஊதியமானது, மொத்த ஊதியத்தில் 25 சதவீதத்திற்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. துணைவிதி திருத்தம்: பணியாளர் கூட்டுறவு வங்கியின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, உரிய துணைவிதி திருத்தங்களை சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் பதிவு செய்த பின்னரே, உயர்த்தப்பட்ட உச்சவரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி, வங்கியின் உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக *ரூ.35,00,000/- (ரூபாய் முப்பத்தி ஐந்து இலட்சங்கள்)* தனிநபர் கடன் வழங்குவதை, மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவால் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.