×

"ஞாயிறு முழு ஊரடங்கில் இனி இதற்கு அனுமதி" - அரசு வெளியிட்ட புது தகவல்!

 

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது தான் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்றவுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஜூன் மாதத்திலிருந்து கொரோனா பரவல் குறைந்துகொண்டே வந்தது. அதற்கேற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எல்லாம் முடிந்தது இனி இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்று நினைத்த வேளையில் ஒமைக்ரான் என்ட்ரி கொடுத்தது.

தமிழ்நாட்டில் எந்த வேகத்தில் கொரோனா பரவல் குறைந்ததோ அதைவிட அதிவேகத்தில் உச்சம் பெற்று வருகிறது. இந்தியாவிலேயே அபாய கட்டத்தில் உள்ள 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆகவே மீண்டும் பழைய கட்டுப்பாடுகள் தூசு தட்டப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 9ஆம் தேதி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. உணவு டெலிவரி நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ஆனால் இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இச்சூழலில் மருந்து மற்றும் பால் டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வரும் ஜனவரி 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போது பால் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்யும் மின் வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்நிறுவன ஊழியர்களுக்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.