“அடுத்தக்கட்ட நகர்வு குறித்து 2 நாட்களில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளேன்”- ஓபிஎஸ்
2 தினங்களுக்கு பின் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதன் பிறகு எனது முடிவை அறிவிப்பேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று மாலை சென்னை அருகே மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, அமமுக, பாமக தாமாக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் 2 நாட்களாக தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பெரியகுளம் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 2 தினங்களுக்கு பின் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதன் பிறகு தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் எனக் கூறினார். தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் அப்போது முடிவை அறிவிப்பதாக தெரிவித்த கேள்விக்கு, தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும் எனக் கூறினார்.