×

மக்கள் உஷாரா இருங்க..! பருவமழையை எதிர்கொள்ள படகுகள் தயார் - மேயர் பிரியா..!
 

 

சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது,வட கிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் 17- ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மழை பெய்தால் தான் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிவிக்க முடியும்.  

சென்னையில் 20 செ.மீ-க்கும் அதிகமாக மழை பெய்தால் மட்டுமே இயற்கையை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். மற்றபடி 20 சென்டி மீட்டருக்கும் குறைவாக பெய்யும் மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது. மழை நேரத்தில் சென்னையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற, 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி வருகிறோம்.

மேலும், தாழ்வான இடங்களை கண்டறிந்து அங்கு தேங்கும் மழை நீரை அகற்ற 50 குதிரை திறன், 75 குதிரை திறன் கொண்ட மோட்டார்களை வழங்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. அதே போல, மழை காலங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.இந்த மழைக் காலங்களில் தாழ்வான மற்றும் மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்களை சமூதாய நலக் கூடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, வரும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக முன்னதாக சமுதாய நலக்கூடங்களை முன்பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இதில், பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைத்தால் அவர்களின் கல்வி கற்கும் நிலை பாதிக்கபடும் என்பதற்காக சமூதாய நலக் கூடங்களை தேர்வு செய்துள்ளோம். சமூதாய நலக் கூடங்கள் போதாத பட்சத்தில் ஒரு சில பள்ளிகளில் பொது மக்கள் தங்க வைக்கப்படுவர். மழைக் காலம் தொடங்க உள்ளதால் சென்னையில் சாலை கட்டமைப்பு பணிகளை நிறுத்துமாறு மெட்ரோ உள்ளிட்ட நிர்வாகங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் மழைக் காலம் முடிந்த பின்னர் சாலை கட்டமைப்பை தொடங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கூடுதலாக நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களது வார்டு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன்வளத்துறை சார்பில் படகுகள் ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் படகுகள் வாங்கப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தப் படகுகள் மழைக் காலங்களில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட படகுகள் மட்டுமின்றி கூடுதலாக படகுகள் தேவைப்பட்டால் அதனை, மீனவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.