“சத்யபாமா ஒழிக.. துரோகி வெளியே போ”- தவெக வேட்பாளருக்கு மக்கள் எதிர்ப்பு
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் பரப்புரையின்போது “சத்யபாமா ஒழிக” என முழக்கமிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். அடுத்த வாரம் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா பிரச்சாரம் மேற்கொண்டபோது, “எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என மக்கள் ஆவேசமாக கூறினர். மேலும் “சத்தியபாமா ஒழிக” என மக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் சத்தியபாமா பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டார்.