×

மக்கள் கேள்வி கேட்டு உண்ணாவிரதம் : வாக்குறுதி கொடுத்தீங்களே, செஞ்சீங்களா?

 

சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கணியூர் ஊராட்சி. இங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும்; உடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும்; சுங்க சாவடி கட்டணத்தை தவிர்ப்பதற்காக அதிக வாகனங்கள் கிராம சாலைகளைப் பயன்படுத்துவதால், சேதமடைந்த ரோட்டைச் சீரமைக்க வேண்டும்; குடியிருக்கும் நிலத்தின் பட்டாவை வகை மாற்றம் செய்து தரவேண்டும், ஆவண பதிவில் உள்ள தடைகளை நீக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பலமுறை பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனரே தவிர, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். தகவல் அறிந்த தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து, போராட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் ஊராட்சித் தலைவர் வேலுசாமி கூறியதாவது: கோரிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவை. அவற்றை நிறைவேற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை ஏற்க முடியாது. பல துறைகள் தொடர்பானவை என்பதால், அனைத்து அதிகாரிகளும் இணைந்து பேசி உடனடியாக முடிவெடுத்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலெக்டரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக, அதிகாரிகள் உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.