×

"நல்ல நாள் அதுவுமா கறி இல்லைனா எப்படி?" - துறைமுகத்தை சூழ்ந்த கடலூர் மக்கள்!

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வெகு விமர்சையாக பொங்கலை கொண்டாடினார்கள். அந்த வகையில் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் உழவர் பெருமக்கள் தங்கள் கால்நடைகளை குளிக்க வைத்து ஸ்பெஷலாக அலங்கரித்து கொண்டாடுகிறார்கள். அதேபோல உலகிற்கே நன்னெறி போதித்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த தினமும் இன்று தான். இதன் காரணமாக இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு ஏற்கெனவே அறிவித்தது போல முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதனால் நாளை மறுநாளும் இறைச்சிக் கடைகள் செயல்படாது. பொங்கல் திருநாளில் முக்கிய நாளே கரிநாள் தான். இந்த நாளில் தான் உறவினர்களை வரவழைத்து கெடா வெட்டி சமைத்து சாப்பிடுவார்கள். 2 நாட்கள் இறைச்சிக் கடைகள் இல்லாமல் இருப்பதால் இவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லை. மற்றவர்கள் இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடு, கோழி, மீன் என சகல ஜீவராசிகளின் இறைச்சிகளை வாங்கி வீட்டில் கொண்டாடுபவர்களின் நிலை தான் பரிதாபமாகிவிட்டது.

நல்ல நாள் அதுவுமாக புது துணி போடாவிட்டாலும் தமிழன் வேதனைக்குள்ளாக மாட்டான். கறி இல்லாவிட்டால் தலையில் இடியே இறங்கிவிடும். ஆகவே எப்படியாவது கறியை ருசித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் நேற்று நள்ளிரவே துறைமுகங்களை சூழ்ந்துவிட்டனர். இரவு நேர ஊரடங்கெல்லாம் ஜூஜூபி என்பது போல் கடலூர் மக்கள் அங்குள்ள துறைமுகத்தில் முகாமிட்டனர். இன்று அதிகாலை வரை அங்கேயே குழுமியிருந்து மொத்த மீன்களையும் வாரி சுருட்டிவிட்டனர். இது ஒருபுறம் இருந்தாலும் அங்கே சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என்பது தான் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் நோய் தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சமும் சேர்ந்தே எழுந்துள்ளது.