×

விமான சாகசத்தைக் காண குவிந்த மக்கள்..! கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..

 


மெரினாவில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படை, அதன் 92வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய விமான வான் சாகசக்காட்சியை நிகழ்த்தவுள்ளது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.  தற்போது 1.70 லட்சம் வீரர்களை கொண்டுள்ள இந்திய விமானப்படையில்,  1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. விமானப்படையை நிறுவிய தினத்தை அனுசரிக்கும்  விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும், இந்திய விமானப்படை தினம்  வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  

அப்போது  ‘ஏர் ஷோ’ என அழைப்படும் பிரம்மாண்டமான வான் வழி சாகச நிகழ்ச்சியை இந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்துவர். அந்தவகையில் இந்த ஆண்டு  சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி மிகப்பெரிய விமான வானசாகசக்காட்சி நிகழ்த்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

அதேபோல், இலவசமாக மக்கள் சாகச நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கபட உள்ளதால் அன்றைய தினம் மெரினா கடற்கரைக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலைய்க்ல்  இன்று இறுதிக்கட்ட மற்றும் முழு விமான சாகச ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த  இறுதிகட்ட விமான சாகச பயிற்சி நடைபெறுவதால் சென்னை விமான நிலையத்தில் இன்று 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால்  வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.