மக்களே உஷார்..! அக்.15 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் அமல்..!
அக்டோபர் 15-ம் தேதி முதல் வணிக பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.2,000-க்கும் அதிகமான UPI வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ரூ.100 வணிக பரிவர்த்தனைக்கும் 40 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனிநபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. தனிநபர்கள் தங்களுக்குள் வரம்பின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம். 70 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் தனிநபர்களுக்கு இடையில் நடைபெறுவதால், கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
தனி நபர்கள் யுபிஐ பரிவர்த்தனை மூலம் வணிகர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்பும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே, வணிகர்களுக்கு 2,000 ரூபாய் வரை பணம் செலுத்தும் போது வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ரூ.2,000 மேல் 0.4% கட்டணம்
அதே சமயம், ரூ.2,000-க்கும் அதிகமான தொகையை தனிநபர்கள் யுபிஐ மூலம் வணிகர்கள் அல்லது நிறுவனத்திற்கு அனுப்பும் போது, 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். தனிநபர்- வணிகர்கள் இடையிலான யுபிஐ பரிவர்த்தைகளில், 96 சதவீத பரிவர்த்தனைகள் ரூ.2,000க்கும் கீழ் நடைபெறுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 4 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே கட்டண வரம்புக்குள் வரும். மேலும், ரூ.75,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை யுபிஐ மூலம் அனுப்பும் போது அதிகபட்ச கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும்.
யுபிஐ பரிவர்த்தனை மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை பெறும் சிறு வியாபாரிகள், தனிநபர்- டூ - வர்த்தகர் என்ற அடிப்படையில், வியாபாரிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இதனால், சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்படும்.
ரயில்வே, தொலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அத்யாவசிய செலவுகளுக்கு ரூ.2,000-க்கும் மேல் யுபிஐ மூலம் செலுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும்.
வணிகர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது வங்கிகளுக்கும், நிதி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், யுபிஐ பரிவர்த்தனை வழங்கும் நிறுவனங்களுக்கும் உதவிகரமாக இருக்கும். நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த கட்டணம் விதிப்பு, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.