மக்களே உஷார்..! இனி அரசை விமர்சித்தால், மீம்ஸ் போட்டால் ஒழுங்கு நடவடிக்கை..!
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 19ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், ஊடகங்கள் மற்றும் மீம்ஸ் மூலம் விமர்சிப்பது நடத்தை விதிகளுக்கு எதிரானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1973-ம் ஆண்டு நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
- பொதுவெளியில் விமர்சனம் கூடாது
- நல்லுறவை பாதிக்கக்கூடாது
- விமர்சன கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது
பொதுவெளியில் விமர்சனம் கூடாது: அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ பாதகமாக விமர்சிக்கக்கூடாது. அதாவது செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ் (Memes) போன்றவை மற்றும் பொதுக்கூட்டங்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லுறவை பாதிக்கக்கூடாது: பிற அரசுகளுடனான நல்லுறவை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது.
விமர்சன கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது: அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது.
யாருக்கெல்லாம் இந்த உத்தரவு
இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சார்நிலை அலுவலகங்கள், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கோப்புக்காக என இந்த ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
மீறினால் தண்டனை?
விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது சுகாதாரத்துறையில் மட்டுமே அமல்படுத்தபட்டாலும், விரைவில் அனைத்து துறைகளுக்கும் இது போன்ற ஆணை வெளியாகலாம் என கூறப்படுகிறது.