×

மக்களே உஷார்..! நாய் கடித்த எம்பிஏ பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு..!  

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் எட்வின் பிரியன்(23). எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் நாய் கடித்துள்ளது. வீட்டில் யாரிடமும் கூறாமலும், அதற்கான சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் அலட்சியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு எச்சில் துப்புவதும் சத்தம் போட்டு அலறியபடியும் இருந்துள்ளார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் அவரை நாய் கடித்தது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவருக்கு தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். ரேபிஸ் தாக்கி பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் ஒருவரை கடித்து விட்டால் அவர் கட்டாயம் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  72 மணி நேரம் என்பது 3 நாட்கள். தடுப்பூசி போட்டாலும் antibodies சுமார் 7 நாட்கள் கழித்து தான் உருவாகி வைரஸை எதிர்த்து போராடும். ஆக, 3+7 = 10 நாட்கள். இந்த 10 நாட்கள் வரை antibodies உடலில் உருவாகவில்லை என அர்த்தம். இந்த 10 நாட்களுக்குள் வைரஸ் கடிப்பட்டவரின் நரம்புக்குள் நுழைந்து விட்டால், பின்னர் அதனை தடுக்க முடியாது. அவை மூளைக்கு நிச்சயம் சென்று விடும். மரணம் நிச்சயம்.