மக்களே உஷார்..!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது..
அதன்பின், அடுத்த இரண்டு நாட்களில், இது மேற்கு - வடமேற்கு திசையில், ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 2ம் தேதி, நீலகிரி மாவட்டத்தில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.