மக்களே உஷார்..!! வங்கி பணத்தை குறிவைக்கும் மர்ம கும்பல்..!
'மொபைல் போன்' பயனர்களை குறிவைத்து நாள்தோறும் பலவிதமான சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த வகையில், ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மோசடி அதிகரித்து வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமைச்சகத்தின், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு நேற்று வெளியிட்டு உ ள்ள அறிக்கை: சமீபகாலமாக, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடக விளம்பரங்கள் வாயிலாக, ஆபத்தான ஆபாச செயலிகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை 'கிளிக்' செய்யும் பயனர்கள், சில ஆபாச இணையதளங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
அங்கு, அவர்களை நம்பவைத்து, 'கூகுள் பிளே ஸ்டோருக்கு' வெளியே இருந்து சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். குறிப்பாக, 'நைட் பிளே, ரீலுாப், கிஸ், விமோ, ரிவோ, நெக்ஸோ, விக்ஸா' போன்ற பெயர்களில் இந்த ஆபத்தான செயலிகள் உலா வருகின்றன.
இந்த செயலிகள் மொபைல் போனில் நிறுவியதுடன், அவை அதன் முக்கிய கட்டுப்பாடுகளை இயக்குவதற்கான அனுமதிகளை கேட்கின்றன. குறிப்பாக, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள 'அக்செசிபிலிட்டி' எனப்படும் அனுமதியை பெற்று, பின்புலத்தில் இயங்குகிறது. இதையடுத்து, மொபைல் போன்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மர்ம நபர்கள், பயனருக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்குகளில் இருந்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த செயலிகள், 'அப்டேட்' என்ற பெயரில் மற்றொரு 'மால்வார்' எனப்படும் தீம்பொருளை பதிவிறக்கம் செய்து ஒட்டு மொத்த மொபைல் தரவுகளையும் திருடுகிறது. எனவே, ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் பயனர்கள் செயலிகளை எப்போதும் 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விளம்பரங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்பு வழியாக வரும் செயலிகளை தவிர்க்கவும். முன்பின் தெரியாத செயலிகளுக்கு, 'அக்செசிபிலிட்டி' அனுமதியை ஒருபோதும் வழங்கக் கூடாது. போனில் இருக்கும் செயலிகளை தொடர்ந்து கண்காணித்து தேவைஇல்லாத அல்லது தெரியாத செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும்.
மொபைல் போனில், 'கூகுள் பிளே புரொடெக்ட்' எனப்படும் பாதுகாப்பு வசதியை இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். மொபைல் போன் மென்பொருளை உடனுக்குடன் அப்டேட் செய்ய வேண்டும். வங்கி மற்றும் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளத்தின் கணக்குகளை தொடர்ந்து சரிபார்த்து வரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த வகையான மோசடி செயலிகளை கண்டறிபவர்கள், உடனடியாக '1930' என்ற தேசிய உதவி எண்ணிலோ, அல்லது www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ சைபர் குற்ற புகார் இணைதளத்திலோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயலிகளை அகற்றுவது எப்படி?
• பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனை 'சேப் மோடு' எனப்படும் பாதுகாப்பான பயன்முறையில் 'ரீஸ்டார்ட்' செய்யலாம் • பின், பயனர்கள் அமைப்புகள் என்ற பிரிவில் உள்ள செயலிகள் பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கிடமான செயலிகளை நீக்கலாம் • சாதனத்தை 'ரீஸ்டார்ட்' செய்த பிறகும், ஒரு செயலியை அகற்றவோ அல்லது மீண்டும் கொண்டு வரவோ முடியாவிட்டால், பயனர்கள் முக்கியமான தரவுகளை எடுத்து வைத்துக் கொண்டு, போனை, 'பேக்டரி ரீசெட்' செய்யலாம்