மக்களே உஷாரா இருங்க..! சென்னையில் டெங்கு பாதிப்பு இரு மடங்கு உயர்வு
டெங்குத் தொற்றை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் கடித்த 4 முதல் 10 நாட்களுக்குள், தீவிரமான காய்ச்சல் உள்ளிட்ட அதற்கான அறிகுறிகள் தெரியும். திடீரென 104 டிகிரி வரை கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, கண்கள் மற்றும் பின்பகுதியில் வலி, மூட்டு வலி, வாந்தி, குமட்டல் மற்றும் தோலில் சிவந்த தடிப்புகள் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஏடிஸ் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிட்டுப் பெருகும் என்பதால், வீட்டைச் சுற்றிலும் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள் மற்றும் உடைந்த பாத்திரங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் நீரைச் சேமிக்கும் பாத்திரங்களை எப்போதும் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
ஏடிஸ் கொசுக்கள் முக்கியமாகப் பகல் நேரத்திலேயே கடிக்கும் என்பதால், பகலில் முழு உடலையும் மூடும் ஆடைகளை அணிவதும், கொசு வலைகளைப் பயன்படுத்துவதும் அவசியமாகும். இந்நிலையில் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, உடனடியாக அரசு அல்லது அருகில் உள்ள மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இளநீர், நிலவேம்பு கஷாயம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பருவமழைக் காலம் தொடங்கி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கொசு உற்பத்தி தடுப்புப் பணிகளும், காய்ச்சல் முகாம்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை முழுவதும் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் பாதிப்பு 1,290 ஆக இருமடங்காக அதிவேகமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, நேற்று (செப்டம்பர் 30) ஒருநாளில் மட்டும், சென்னையில் 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.