×

மக்கள் ஷாக்..! 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை மூட தமிழக அரசு முடிவு..!

 

தமிழ்நாட்டு நெசவாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி மற்றும் ஜவுளி ரகங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்குவதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் உள்ளன.

தற்போது கோ-ஆப்டெக்ஸ் சார்பில் நாடு முழுவதும் மொத்தம் 145 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், விற்பனை குறைவு மற்றும் வர்த்தக ரீதியான காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 4, ஆந்திராவில் 5, மும்பையில் 1 என மொத்தம் 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம், கடலூர், திருநெல்வேலி, வேலூர், விஜயவாடா, மும்பை உள்ளிட்ட மண்டலங்களில் அமைந்துள்ள 10 ஷோரூம்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சேலம் மண்டலத்தில் விற்பனை ஏற்கனவே ஜூலை 31 அன்று நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர், திருநெல்வேலி மற்றும் மும்பையில் உள்ள விற்பனை நிலையங்களில் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற விற்பனை நிலையங்களை பொறுத்தவரை, கட்டிட உரிமையாளர்களுக்கு ஷோரூம்களை காலி செய்யுமாறு கடிதம் வழங்குதல், தேவையான இடங்களில் வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல், கட்டிடங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான ஷோரூம்களின் கட்டடங்களை இம்மாத இறுதிக்குள் காலி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10 ஷோரூம்கள் மூடப்படுவதால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. அவர்களை வேறு ஷோரூம்களுக்கு பணியிட மாற்றம் செய்வார்களா? அல்லது வேறு வகையில் அவர்களுக்கு பணி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விற்பனை சரிவு காரணமாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதிலும், ஷோரூம்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலத்திலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.