#BREAKING சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்வு
சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதனை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2000 ரூபாயிலிருந்து 3,200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக 1200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக 1100 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக 1000 வழங்கப்படும் என்றும் சிறப்பு ஓய்வூதியம் இந்த பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.