மன்னிப்பு கோரிய கார்த்தி- பாராட்டிய பவன் கல்யாண்
திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதற்கு அவரை ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், மெய்யழகன் படத்தின் தெலுங்கு வெர்ஷன் விழாவில், நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளினி கேட்க, “அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்” என அவர் பதிலளித்தார். லட்டு குறித்து கார்த்தி பதில் சொன்ன போது அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது. இதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், லட்டை கேலிக்குரிய பொருளாக்குவதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, தான் பேசியதற்கு நடிகர் கார்த்தி எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். அதில், “அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள கார்த்தி உங்கள் அன்பான விரைவான பதிலையும் நான் கூறிய தகவலை சுட்டி காட்டிய விதத்தின் மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் புனிதமான லட்டுகள் போன்ற நமது புனித கோயில் பற்றிய தகவல் பலகோடிகணக்கான பக்தர்களின் உணர்வு பூர்வமானது. மேலும் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். பிரபலமானவர்கள் என்ற முறையில் நாம் ஒருங்கிணைந்து குறிப்பாக நாம் போற்றும் நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மிக கோட்பாடுகளை காக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.