40–50 ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டா; சட்டப்பேரவையில் MLA கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தல்!
40–50 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா – பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள்: MLA கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தல்
கோவை: கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை சட்டப்பேரவையில் MLA கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தினார்.
அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 40–50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், மின் கட்டண ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருந்தும் இதுவரை வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் உள்ளனர். பட்டா இல்லாததால் வங்கிக் கடன் பெற முடியாமலும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, அவர்களின் வாழ்வுரிமையையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, அறுவை சிகிச்சை மையம், விபத்து சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
“மக்களின் வாழ்வுரிமை, பொருளாதார உரிமை மற்றும் மருத்துவ உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்” என்ற நோக்கில், கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை சட்டப்பேரவையில் MLA கனிமொழி சந்தோஷ் முன்வைத்தார்.