×

3வது மொழித் தேர்வு தேர்ச்சி இனி கட்டாயம் - சிபிஎஸ்இ உத்தரவு

 

2027-28ல் 10ம் வகுப்பில் 3ம் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.   

சிபிஎஸ்இ நிர்வாகம் 3ஆம் மொழியை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களே 3 மொழிகளை படித்தாக வேண்டும். 9ஆம் வகுப்பில் 3ம் மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அடுத்த ஆண்டு தேர்ச்சி அளிக்கப்பட்டு 10ஆம் வகுப்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 2027-28ல் 10ம் வகுப்பில் 3ம் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.   

9,10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் 3ம் மொழி விடைத்தாள்கள் பள்ளியிலேயே மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் 3ம் மொழி தேர்வு விடைத்தாள்கள் 2017-18ல் பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்யப்படும். 2026-27 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழி பாடம் இல்லை என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. 3வது மொழிப் பாடத்தேர்வும் 2028-29ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணையில் சேர்க்கப்படும். 2028-29 முதல் 3வது மொழிக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் வெளி மதிப்பீடு செய்யப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தற்போது 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 10ஆம் வகுப்புக்கு வரும்போது 3 மொழிப்பாடம் பொதுத்தேர்வாக இருக்கும். சிபிஎஸ்இ மும்மொழி திட்டத்தில் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும், அந்நிய மொழி ஒன்று இருக்கலாம். அந்நிய மொழியான ஆங்கிலம் ஒரு மொழி எனில், சொந்த மாநில மொழி, மற்றொரு இந்திய மொழி இருக்க வேண்டும். அதன்படி, தற்போது 7,8 ஆம் வகுப்புகளில் அந்நிய மொழிகள் படித்து வருபவர்கள் 3வதாக இந்திய மொழியை சேர்த்து படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 22 மொழிகளில் ஒன்றை 3வது மொழியாக படிக்க வேண்டும்.