விமான பயணிகள் ஷாக்..! கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு..!
ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் வரும் 26 ஆம் தேதி புதன்கிழமை கேரள மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல கேரள மாநிலத்தவர்களுக்கு ஓணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை ஆகும்.
இந்த ஓணம் பண்டிகையை கேரள மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இதனையொட்டி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே சென்றுவிடுவது வழக்கம்.
அந்த வகையில், வரும் 26 ஆம் தேதி ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கேரள மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சூழலில் ரயில், பேருந்துகளில் செல்லும் போது பயண நேரம் அதிகமாகும் என்பதால் பலர் விமானங்களில் கேரள மாநிலம் செல்லத் துவங்கியுள்ளனர்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சேர்த்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று சனிக்கிழமை முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, கேரள மாநிலத்தவர் அதிகமானோர் விமானங்களில் சொந்த ஊர் திரும்புவதால், சென்னையில் இருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை, - கொச்சி விமான கட்டணம் வழக்கமாக ரூ.5,336-ஆக இருக்கும் நிலையில், இன்று கட்டணம் ரூ.14,843-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.5,853-ஆக இருக்கும் நிலையில், இன்று கட்டணம் ரூ.14,700-ஆக உயர்ந்துள்ளது. சென்னை - கோழிக்கோடு விமான கட்டணம் ரூ.6,158-ஆக இருக்கும் நிலையில், இன்று கட்டணம் ரூ.17,678-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை - கண்ணூர் விமான கட்டணம் ரூ.5,655-ஆக இருந்த நிலையில், இன்று கட்டணம் ரூ.12,270-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கண்ணூருக்கு கொச்சி வழியாக செல்வதற்கு கட்டணம் ரூ.21,694-ஆக உள்ளது. இவ்வாறு பல மடங்கு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.