×

பாஸ், QR கோடு தேவையில்லை; பொதுமக்கள் சுதந்திரமாக வரலாம் - செங்கோட்டையன்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைப் பரப்புச் செயலாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

நாங்கள் சொல்லுவதைவிட, நீங்கள் நேரில் பார்த்து பத்திரிகைகளின் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

குறிப்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று காலை விழா திடலில் நேரில் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்புப் பணிகளும் தற்போது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

மருத்துவ மற்றும் குடிநீர் வசதிகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 58 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பார்கள் என்றும், 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைக்காகத் தனி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக 10 லாரிகளில் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன கண்காணிப்பு மற்றும் ஊடக வசதிகள் பாதுகாப்பினை உறுதி செய்ய 5 ட்ரோன்கள் மற்றும் 60 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அத்துடன், செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தடையின்றிப் பணியாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் விழா திடலில் செய்யப்பட்டுள்ளன.

பாஸ் மற்றும் கியூஆர் கோடு குறித்து விளக்கம் நிகழ்ச்சிக்கு வருவதற்கு பாஸ் அல்லது கியூஆர் கோடு அவசியமா என்ற குழப்பத்திற்குச் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார். பொதுமக்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக வந்து உரையை ரசிக்கலாம் என்றும், 35,000-க்கும் அதிகமான மக்கள் வந்தாலும் அவர்களை முறைப்படுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

அரசியல் எதிர்பார்ப்பும் திருப்பமும் முன்னாள் நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்களா என்ற கேள்விக்கு, "தலைவரின் உத்தரவுப்படி அனைத்தும் நடக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" எனச் செங்கோட்டையன் ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்த ‘டுவிஸ்ட்’ பதில், நாளைய கூட்டத்தில் அரசியல் ரீதியாக ஏதேனும் அதிரடி மாற்றங்கள் அல்லது முக்கியத் தலைவர்களின் வருகை இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.