சுடுகாட்டிற்கு அருகே டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும்- விஜய்க்கு பார்த்திபன் கோரிக்கை
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். அதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளை சுடுகாட்டிற்கு அருகே வைத்தால் குடிமகன்களுக்கு அச்சம் ஏற்படும் என நடிகர் பார்த்திபன் கருத்து கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன், முதலமைச்சர் விஜயை சமீபத்தில் சந்தித்தபோது, டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் அபாயம் உள்ளது. அதனால் கடைகளை ஊருக்குள் வைக்காமல், ஒதுக்குப்புறமாக சுடுகாடு அருகே வைக்க வேண்டும். இது ஒரு சைக்கலாஜிக்கல் எச்சரிக்கையாக இருக்கும். எப்படியென்றால் கடைசியாக நாம் வரும் இடத்திற்கு, இப்போதே வருகிறோமே என்ற எண்ணம் குடிப்பவர்களுக்கு வரும். இப்படி செய்தால் அரசுக்கு வருமானமும் கெடாது. ஊருக்குள் தகராறும் வராது என யோசனை கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜயுடனான சந்திப்பு குறித்து நினைவுக்கூர்ந்த பார்த்திபன், “நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, விஜய் என் தோளில் கை வைக்க முனைந்தார். ஆனால் அதற்கு முன், ‘சார், கை போடலாமா?’ என்று மிகவும் மரியாதையுடன் கேட்டார். முதலமைச்சராக உயர்ந்த பிறகும் அவர் காட்டிய அந்த பணிவும் மரியாதையும் என்னை மிகவும் நெகிழச் செய்தது” என்றார். மேலும், இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடியதாகவும், அந்த சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அன்பு நிறைந்ததாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.