×

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்- மருத்துவமனையிலேயே கொடுத்து சென்ற பெற்றோர்

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்,  பிரசவத்திற்காக கடந்த மாதம்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்த பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது.  

இதில் குழந்தைகளின்  எடை   குறைவாக இருந்ததால்,  குழந்தைகள் நல மருத்துவர்கள்  தீவிர  சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் தான், கடந்த மூன்று இனங்களுக்கு முன்பு,  குழந்தைகளை தங்களால் பராமரிக்க முடியாத  சூழல் உள்ளது ,  எனவே நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என பெற்றோர், மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த  மருத்துவர்கள் பெற்றோரை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் தங்களது குடும்ப சூழ்நிலையால் , மூன்று  குழந்தைகளையும்  வளர்க்கவே  முடியாது  என உறுதியாகவும், உருக்கமாகவும்  தெரிவித்துள்ளனர். இமனால்  மூன்று பெண் குழந்தைகளையும்  அரசு மருத்துவமனையிலேயே வைத்து மருத்துவர்கள்  பராமரித்து வந்தனர். 

தற்போது குழந்தைகள் ஓரளவு  எடைக்  கூடி,  நல்ல முறையில் உள்ளனர். இந்த நிலையில் இது குறித்த தகவல்  அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ,  நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மூன்று பச்சிளம் பெண்  குழந்தைகளையும் பார்த்தார். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 
உமா மகேஸ்வரிடம் குழந்தையை ஒப்படைத்து , அதனை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் முன்னிலையில் 3 பெண் சிசுக்களும் ,  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஷ்வரியிடம்  ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர்கள் 60 நாட்களில் மனம் மாறி வராவிட்டால் , அக்குழந்தைகளை உரிய முறையில்,  சட்ட விதிகளுக்கு உட்பட்டு தத்து கொடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.