×

பெற்றோர்களே உஷார்..! இது சின்னம்மை பரவும் காலம்... எச்சரிக்கை தேவை: சுகாதாரத்துறை..!

 

கேரள மாநிலத்தில், சின்னம்மை நோய் பாதிப்பால், 50 நாட்களில், 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலத்தில் இருந்து வெப்பமான பருவம் மாறும்போது, சின்னம்மை பரவல் அதிகரிக்கிறது. 

தமிழகத்தில் சின்னம்மை பரவும் காலமாக, பிப்., முதல் ஏப்ரல் மாதம் வரை இருப்பதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:சின்னம்மை நோய் எளிதில் பரவும் தொற்று. ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் கூட பரவுகிறது.

இந்நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் துவங்கும். பின், உடலில் சிறிய நீர் திவளைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி, உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து, பின் உடைந்து காய்ந்து விடும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொதுவாக சிறிய அளவு பாதிப்பை தான் ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்துதல் மற்றும் சரியான பராமரிப்பு ஆகியவற்றால் எளிதாக குணமாகி விடும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்ண வேண்டும். அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை, 10 நாட்கள் வரை, பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை, கிருமி நாசினி அல்லது வெந்நீரில் சுத்தம் செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் யாரிடமாவது இருந்தால், டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். சின்னம்மை குறித்த மேலும் தகவல்களுக்கு, '104' என்ற மருத்துவ சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.