பெற்றோர்களே உஷார்..!! இனி சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்..!!
சிறார்கள் பொதுச் சாலைகளில் வாகனம் இயக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் போன்ற மோட்டார் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும் என்று தமிழக காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டம் எச்சரிக்கிறது.
மேலும், அந்த சிறார்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும். மிக முக்கியமாக, விதியை மீறி வாகனம் ஓட்டிய அந்த சிறாருக்கு, அவர் 25 வயதை அடையும் வரை எந்தவொரு ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட விதிமுறைகள் மூலம் சிறார்களின் வாகன விபத்துகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.