×

பரந்தூர் விமான நிலையம்: முக்கிய ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்!

 

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது. 

சென்னையின் இரண்டாவது  விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.  இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.  பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தம் பணியில் தமிழக அரசின்  தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.  அதேநேரம் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட  அனுமதிக்காக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.  இதனைத்தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை ஒன்றிய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கியது.  இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா,  தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.