×

பரமக்குடி சிறுமி வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்

 

ராமநாதபுரம் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சிகாமணி(43). இவர் அதிமுகவில் நகர் அவை தலைவராக இருந்தார். பரமக்குடி நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார். இவர் பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி, காரில் அழைத்து சென்று மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், அதிமுக கவுன்சிலர் சிகாமணி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிகாமணி, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், ராமநாதபுரம் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. மகளிர் காவல் நிலையத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.