“அதிமுகவை தவெக கபளீகரம் செய்துவிட்டது! தவெக 2வது மாற்று சக்தியாக ஆகிவிட்டது”- பண்ருட்டி ராமச்சந்திரன்
ஓபிஎஸ்சை பிரிந்து புதிய எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், “நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை குழு மூலம் தடுக்கின்றனர். நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டும் தற்போது வரை அத்திரைப்படம் வெளிவரவில்லை. டெல்லியை கணக்கு பார்க்கும் நேரம் வந்துவிட்டது. முற்போக்கு அரசியலாக தங்களது கட்சி திகழும். அதிமுகவை வீழ்த்தி அந்த இடத்தை பிடிக்க பாஜக திட்டமிட்டது. பாஜக பிடிக்க நினைத்த அதிமுகவின் இடத்தை விஜய் பிடித்துவிட்டார்.திமுக- அதிமுக என்ற நிலை மாறி இன்று திமுக- தவெக என மாறிவிட்டது. தவெக அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது. எம்ஜிஆர் போல விஜய் நின்றால் மாநாடு, நடந்தால் பேரணி. தமிழகத்தின் 2வது மாற்று சக்தியாக ஆகிவிட்டது தவெக. திமுகவை வலுவாக எதிர்க்கும் ஆற்றல் விஜய்க்கு தான் உள்ளது. ஒரு சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய். எதிர்கால தமிழகத்தின் முகமாக விஜய் இருப்பார்
திமுக பக்கம் ஓபிஎஸ் செல்ல நினைப்பது சரியான முடிவுதான். எதிர்காலம் என்பது பாஜக Vs திராவிட இயக்கம் தான் என இருக்கும். அதனால் திராவிட இயக்கத்தின் பக்கம் செல்லும் முடிவை எடுத்திருக்கிறார் ஓபிஎஸ். முதலமைச்சர் ஸ்டாலினின் 5 ஆண்டு கால செயல்பாடுகள் நன்றாக உள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்ட முதல்வர்கள்.. ஆனால் மக்கள் ஆதரவு பெற்றவர் முதலமைச்சர் ஸ்டாலின். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது. தலைமைப் பண்பு என்பதும் ஸ்டாலினிடம் நன்றாக இருக்கிறது” என்றார்.