பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த அலர்ட்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நாளை காலை 10.17 மணிக்கு PSLV-C62 ராக்கெட் மூலம் EOS -N1 உட்பட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவுப்பட உள்ளன. வணிக ரீதியிலாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வரும் ஒன்றிய அரசின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) என்ற நிறுவனம், பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் மூலம் EOS-N1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 15 இணைச் செயற்கைக்கோள்களையும் நாளை விண்வெளியில் நிலைநிறுத்த உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்க உள்ளது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி நாளை (ஜனவரி 12ஆம் தேதி) பழவேற்காடு பகுதி மீனவர்கள் உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.