×

தவெகவை கணிக்க தவறிவிட்டோம்... தேர்தல் தோல்வியை ஒத்துக்கொண்ட பழனிசாமி

 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்த நிலையில், இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவிடம் இழந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு தவெக உடன் கூட்டணி வைக்காதது தான் காரணம் என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அத்துடன் திமுக உடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறி, அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அதிமுகவில் தேர்வான 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள். இந்த சூழலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியில் பதவி சுகங்களையும், ஆட்சி அதிகாரங்களையும் அனுபவித்தவர்கள் தான் விலகிச் சென்றுள்ளார்கள். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எல்லாம் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். எனவே, எல்லாரும் உற்சாகமாக கட்சிப் பணியாற்றுங்கள். இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் தரப்படும். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என நினைத்து தமிழக வெற்றிக்கழகத்தை கணிக்கத் தவறிவிட்டோம். அதன் விளைவாக இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். சினிமா மோகத்தில் இளைஞர்களும், குழந்தைகளும், தங்களது பெற்றோரை வலியுறுத்தி வாக்களிக்க வைத்துவிட்டார்கள் மாவட்டந்தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சீர்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதேபோல, அ.தி.மு.க. மக்களுக்கு தந்த திட்டங்களை இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்” என்றார்.