×

பழனி கோயில் நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு.. சார் பதிவாளர் சஸ்பெண்ட்

 

பழனி கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள், பதிவுகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை பாதிக்கப்படாமல் நடைபெறவும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.