×

பழனி முருகன் கோயில் விடுதிகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு..! பக்தர்கள் அவதி..!!

 

பக்தர்களின் வசதிக்காக பழநி கோயில் நிர்வாகம் சார்பில் ராஜ அலங்காரம், வள்ளி தெய்வானை, குகன், கதிர்வேலகம், கடம்பன், சண்முகர், வடிவேலகம், கந்தன், கார்த்திகேயன் என்ற பெயர்களில் இல்லங்கள் உள்ளன.

சின்ன குமாரர் விடுதி, வேலவன் விடுதி, இடும்பன் குடில், குறிஞ்சி விடுதி ஆகியவையும் உள்ளன. இவற்றில் உள்ள அறைகளுக்கு ரூ.300 முதல் ரூ.2500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை 13) முதல் ரூ.600 முதல் ரூ.4000 வரை கட்டணத்தை கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

தற்போது கந்தன் இல்லம், இடும்பன் குடில் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடக்கிறது. மீதமுள்ள விடுதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் போதுமான அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் தனியார் விடுதிகளை நாட வேண்டிய நிலை உள்ளது.

தற்போது கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.

இந்த கட்டண உயர்வு முடிவை கோயில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் கூறுகையில், 15 ஆண்டுகளாக விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், கட்டண உயர்வுக்கான தேவை ஏற்பட்டுள்ளது, என்றனர்.

மேலும் இன்று (ஜூலை 13) முதல் கார்த்திகேயன் விடுதியில் உள்ள 25 அறைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் அறைகளை முன்பதிவு செய்யலாம்.