#JustNow பழனி நில முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
பழனி மலை அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான பழநி ஆண்டவன் பூங்கா சாலையில் உள்ள பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை தனிநபர்கள் வெறும் ரூ.2 கோடிக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதனிடையே பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை உண்மை என நம்பவைத்து பயன்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் சொத்துக்களை முறைகேடாக அபகரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி மலை அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.