திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசுவது கண்டனத்திற்குரியது: தவெக.!
சென்னையில் போரூர் மெட்ரோ ரயில் தட திறப்பு விழாவின் போது இன்று (அக்.11) பாஜக சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு ஏற்பாட்டில், திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ண உடை அணிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெக தனது X தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசி அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்க முயலும் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அறத்திற்கு முற்றிலும் எதிரானவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள பதிவில், "தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஓங்குபுகழ் தமிழுக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பொதுவானவர். அத்தகைய பெருமானுக்குக் காவி வர்ணம் பூசி, ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கும் பாஜகவின் முயற்சிகள், அறத்திற்கு எதிரானவை, கண்டனத்திற்கு உரியவை.
தமிழ் மண்ணுக்கு என்றே ஓர் அழிக்க முடியாத அறம் இருக்கிறது. பொங்கு தமிழுக்கும் பொங்கு தமிழர்க்கும் இன்னலும் தீதும் விளைவிப்பது போல நடந்துகொண்டால் என்னவாகும் என்பதை உலகமே அறியும். இனிவரும் காலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தமிழக மக்கள் எப்போதும் போல அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இன்றும் என்றும் தமிழக வெற்றிக் கழகம், தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக நிற்பதை ஓர் அறம் சார்ந்த நிலைப்பாடாகவே கொண்டிருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை போரூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.