பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை? – ஹைகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி பதில்!
மதுரை மாவட்டம் கோமதிபுரத்தை சேர்ந்த நர்மதா என்பவர் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பல பெண் பணியாளர்கள், கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படுகின்றனர். அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
‘மாதவிடாய்’ என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும். எனவே தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், "இதுதொடர்பாக விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 2 வார காலம் அவகாசம் தேவை" என தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “விதிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி, சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவை இருக்கும் என்பதால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
பீகாரில் அரசுப் பணிகளில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன்கூடிய விடுப்பு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.