×

"நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு ரத்து" - முதல்வர் ஸ்டாலின் முடிவு?

 

தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது வரை திறக்கப்பட்டுள்ளன. 

ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகள் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த குறுவை சாகுபடியின்போது இந்த முறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது. ஆன்லைன் பதிவு வாயிலாக விற்பது விவசாயிகளுக்கு சிறப்பானதாக இருக்கும் என அரசு நினைக்கிறது. ஆனால் அதில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்களை அரசு கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.

ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றார். ஆனால் இதுகுறித்து விஏஓவிடம் விவசாயிகள் சென்று கேட்டால், தங்களுக்கு  அரசு உத்தரவு எதுவும் வரவில்லை என்ன்றனர். இதனால் என்ன செய்வது என்றே தெரியாத குழப்பத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலையுற்றுள்ளனர். இதனிடையே அவ்வப்போது மழை வேறு பெய்வதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படியே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று ஆன்லைன் பதிவு அவசியமில்லை என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.