பெ. சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு..! தவெக, திமுக, அதிமுக...
தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்.06- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை வரும் அக்.09- ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் சலீம் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (அக்.02) பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சண்முகம், "தட்டாஞ்சாவடி தொகுதியில் எப்படி என்று தெரியவில்லை; தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. ஏனென்றால், எந்தவொரு தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் நாங்கள் தொகுதியில் பார்க்கவில்லை. அவர்களுடைய வாகனங்களைக் கூடப் பார்க்கவில்லை. வழக்கமாக இடைத்தேர்தலில்தான் அதிகமான பணப்புழக்கம் என்பது நடைபெறும், விதிமீறல் என்பது நடைபெறும்.
ஆனால் அப்படி நடைபெறும் என்று தெரிந்தே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாருமே களத்திலே இல்லாமல், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாத நிலைமைதான், தமிழ்நாட்டிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இருந்து கொண்டிருக்கிறது. வாக்குகளுக்காகப் பணம் கொடுப்பது போன்ற தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமாகச் செயல்படக்கூடிய நிலைமை இருக்கிறபோது, தலையிட்டுத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் செயலற்ற தன்மையில் இருக்கிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தவெக, திமுக அணி, அதிமுக- பாஜக அணி ஆகிய மூன்று அணியைச் சேர்ந்தவர்களும் அபரிமிதமான பணத்தை நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணி என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணம் கொடுக்கிறார்கள் என்பதை மக்கள்தான் சொல்கிறார்கள். பணம் கொடுக்காமல் வாக்கு கேட்கிற ஒரே கட்சி நமது இடதுசாரி கட்சிகள் தான்.
'அவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் இப்படி வெறும் நோட்டீஸை மட்டுமே கொடுத்துவிட்டுப் போகிறீர்களே' என்று மிகவும் வருத்தமாக மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அப்படி கொடுக்கவும் மாட்டோம். கொடுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. வாக்குகளை விற்பனை செய்வது என்பது மிகவும் தவறானது என்கிற முறையில் தான் மக்கள் மத்தியிலே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மற்ற மூன்று அணிகளுமே வெளிப்படையாக, எந்தவிதமான தயக்கமோ அல்லது தேர்தல் விதிமுறைகள் நம் மீது பாயுமே, சட்டம் பாயுமே என்கிற கொஞ்சம்கூட அச்சமில்லாமல் அவர்கள் இந்தப் பண விநியோகத்தில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு ஒன்றும் நான் சொல்லவில்லை. தேர்தலில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். 'தூய சக்தி நாங்கள்தான், தமிழ்நாட்டிலேயே தூய சக்தி நாங்கள்தான்' என்று தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவர் சொல்லுகின்ற அந்த வாக்குமூலத்திற்கு நேர் எதிராக இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது அவர்களுடைய தூய சக்தி என்கிற அந்த அடையாளத்தை அழித்தொழிக்கக்கூடிய காரியமாக இருக்கிறது" என்று விமர்சித்தார்.