பங்களா, சொகுசு கார் படங்களை காட்டி மோசடி: 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.9.8 லட்சம் பறிப்பு; இளைஞர் கைது..!
சென்னையை சேர்ந்தவர் கோபிநாதன் (24). இவர் ஆன்லைன் செயலியில் தொழிலதிபர் என பதிவு செய்து, வரன் தேடும் பெண்களுக்கு அனுப்பியுள்ளார்.இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் திருமண வரன் தேடும் செயலிகளில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பர பங்களா, மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளிட்டவைகளுடன் படம் எடுத்து வைத்து கொண்டு தன்னை பெரிய தொழில் அதிபர் போல காட்டி கொண்டு பதிவு செய்து வைத்துள்ளார்.
மேலும் கோபிநாதன் பல்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்களிடம், 'நானும் உங்கள் சாதி, உங்கள் மதம் தான்' என்று கூறி வரன் தேடும் பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அப்போது கோபிநாதன் பெண்களிடம், ''நான் மிகப்பெரிய தொழிலதிபர். வசதியான ஒரு குடும்ப பின்னணியை சேர்ந்தவன்'' என்று கூறி உள்ளார்.இதனை நம்பிய பல பெண்கள் இவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி பேசி வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கோபிநாதன் தொழில் தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்வதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று, அவர்களில் சில பெண்களை வெளியில் அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.
அந்த வகையில திருமண வரன் தேடும் செயலியில் கோபிநாத் விளம்பரத்தை பார்த்து ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் திருமணத்திற்காக பேசியுள்ளனர். கோபிநாத் விரும்பம் தெரிவித்ததையடுத்து அந்த பெண் இவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். பல நாடுகளில் தொழில் நடத்தி வருவது போல கோபிநாத் அந்த பெண்ணிடம் 2 மாதமாக பேசி வந்த நிலையில் தன்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி நைசாக தனது மோசடி வலையை விரித்தார்.
வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என ரூ.20 ஆயிரத்தை ஜிபே மூலம் பெற்றுள்ளார். அடுத்த சில நாட்களில் தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிற்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ரூ.3 லட்சம் அவசரமாக தேவைப்படுகிறது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி நடித்தார் கோபிநாத். பரிதாபப்பட்டு கடன் வாங்கி அந்த பெண் பணத்தை அனுப்பினார்.
அதன் பின் வங்கியில் கோடி கணக்கான பணத்தை முடக்கி விட்டார்கள். ரூ.65 லட்சத்தை வங்கிக்கு அபராதமாக கட்ட வேண்டும் எனக் கூறி கோபிநாத் பணம் கேட்டுள்ளார். அடுக்கடுக்கான பொய்களை மெய் என நம்பி அந்த பெண் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று ரூ.3 லட்சத்தை கோபிநாத்துக்கு அனுப்பி விட்டு ரூ.3 லட்சத்தில் பழைய கடன்களுக்கு தவணை கட்டி வந்துள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தை கோபிநாத் வாங்கி இருக்கிறார்.இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு கோபிநாதன் தனக்கு இன்னும் சிறிது நாட்கள் நேரம் வேண்டும் என்றும், இதுதொடர்பாக என் அண்ணன் உன்னுடன் பேசுவார் என்றும் கூறி யாரோ ஒருவரிடம் செல்போனை கொடுத்து பேச வைத்துள்ளார். அவரும், ''இப்போது கல்யாணம் வேண்டாம். பிறகு வைத்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
இதனால் கோபிநாதன் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த பெண் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் அவர் தொடர்பான விவரங்களை அளித்து கண்டறியுமாறு கேட்டுள்ளார். தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வு செய்து கோபிநாதன் தொழிலதிபர் கிடையாது என்பதையும், இது போல் பலரிடம் மோசடி செய்து வந்ததையும் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் கோபிநாதனை தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது தொழிலதிபர் என்று கூறி கடந்த 3 மாதங்களில் 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தாம்பரம், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் போலி தொழிலதிபர் என தற்போது தெரியவந்துள்ளதால் மேலும் ஏராளமானவர்கள் புகார் அளிக்க முன்வருவார்கள் என தெரிகிறது.
போலீசார் அவருடைய லேப்டாப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் இந்தியா முழுவதும் இவர் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.