×

"வெளியே 20.. உள்ளே 100!" லக்னோ ஏகானா மைதானத்தில் ரசிகர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி; வைரல் வீடியோ!

 

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோவில், மைதானத்திற்குள் விற்கப்படும் அடிப்படை தேவைகளின் விலைவாசி குறித்து வேதனை தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் விற்கப்படும் பொருட்களின் விலைப் பட்டியலைச் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார். சாதாரணக் கடைகளில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், மைதானத்திற்குள் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது வெளிச்சந்தையை விட 5 மடங்கு அதிக விலையாகும்.

அதேபோல், தின்பண்டங்களின் விலையும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியில் 20 ரூபாய்க்கு கிடைக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள், மைதானத்தின் உள்ளே 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. சாதாரண நடுத்தர வர்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் வரும்போது, இது அவர்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.

"ஏற்கனவே ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து டிக்கெட் வாங்கி வருகிறோம். மைதானத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக குடிநீர் மற்றும் உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, உள்ளே இருக்கும் உணவகங்கள் அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட இவ்வளவு அதிக விலைக்கு விற்பது நியாயமற்றது" என அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பிசிசிஐ (BCCI) மற்றும் மைதான நிர்வாகம் தலையிட்டு, ரசிகர்களுக்குத் தேவையான குடிநீரை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.