திட்டமிட்டபடி எங்கள் போராட்டம் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அதிரடி..!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டு சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். குறிப்பாக, கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எவ்வித உறுதியான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த போராட்டங்களை முன்னெடுக்க சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன் படி டிசம்பர் 27 அன்று மாநிலம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் சென்று தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தல் மற்றும் ஜனவரி 6 ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகை காலங்களில் கைது நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும் அதற்கு அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்தனர். "எத்தனை தடைகள் வந்தாலும், சிறைக்குச் செல்ல நேரிட்டாலும் எங்களது வாழ்வாதாரப் போராட்டத்தை மிக வலுவாக முன்னெடுப்போம்" என அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.