×

எங்க வீட்டு புள்ளைங்க அரசு பள்ளியில்தான் படிப்பாங்க..! - தெலங்கானா கிராம மக்களின் மாஸ் தீர்மானம்!

 

தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமப் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயப் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர். தங்களது பிள்ளைகளின் கல்வி தரம் மற்றும் எதிர்கால முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, இக்கிராம மக்கள் அண்மையில் ஒன்று கூடி விரிவான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இக்கூட்டத்தின் நிறைவில், கிராமத்தில் உள்ள அனைத்துப் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் எவரையும் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கக் கூடாது எனவும் ஒட்டுமொத்த பொதுமக்களும் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை மட்டுமே தங்களது முதல் தேர்வாக மக்கள் தேர்வு செய்ததற்கான உன்னத காரணங்கள் குறித்து அப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவி படிகலா லட்சுமி விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தகுதி வாய்ந்த மற்றும் நன்கு படித்த ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும், பிள்ளைகள் தடையின்றி விளையாடுவதற்கான பரந்த விளையாட்டு மைதானங்கள், நவீன அறிவியல் சோதனைக்கூடங்கள் எனப் பல்வேறு தரமான கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிகளில் நிறைந்துள்ளன.

தனியார் பள்ளிகளை விடவும் அனைத்து உன்னத வசதிகளும் அரசுப் பள்ளிகளிலேயே மிகச் சிறப்பாகக் கிடைப்பதால், ஒட்டுமொத்த கிராம மக்களும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற இந்த உன்னத முடிவை எடுத்துள்ளனர்." இவ்வாறு அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.