ஆர்டர் செஞ்சது ஐபோன்... வந்தது எண்ணெய் பாட்டில்..! பிளிப்கார்ட்டுக்கு நுகர்வோர் நீதிமன்றம் போட்ட மெகா அபராதம்!
மும்பையைச் சேர்ந்த நபர், கடந்த 2023, ஏப்ரலில், ப்ளிப்கார்ட் நிறுவன தளத்தின் மூலம் 1.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘ஐபோன் 14 ப்ரோ’ என்ற மொபைல் போனை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில், தாடி பராமரிக்கும் எண்ணெய் பாட்டில் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே இருந்தன.
இதுகுறித்து ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முறையிட்டார். எனினும், உரிய தீர்வு கிடைக்காததால், மும்பை மாவட்ட நுகர்வோர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கமிஷன் பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் புகாருக்கு உரிய தீர்வு வழங்காமல், தட்டிக்கழித்த செயல் நியாயமற்றது. உரிய கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருட்களை வாடிக்கையாளர் பெறுவதை உறுதி செய்யவும், நுகர்வோர் குறைகளுக்கு தீர்வு காணவும் ப்ளிப்கார்ட் நிறுவனம் கடமைப்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் தரப்பில் உடனே புகார் அளித்தும், தவறான பார்சல் திரும்ப பெறப்படவில்லை, பணமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே, வாடிக்கையாளர் செலுத்திய அசல் தொகையான 1.11 லட்சம் ரூபாயை, 2023, ஏப்., முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் அந்நிறுவனம் திருப்பி தர வேண்டும். இதேபோல் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இதுதவிர, நீதிமன்ற வழக்கு செலவுக்காக 20,000 ரூபாய் தனியாக வழங்க வேண்டும். மொத்த தொகையையும், உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் ப்ளிப்கார்ட் நிறுவனமும், அதன் விற்பனையாளரான ‘இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.