×

கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்க - ஓபிஎஸ் வலியுறுத்தல் 

 

அனைத்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுக்குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வம் பெற வேண்டுமெனில் புறத்தூய்மை இன்றியமையாதது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த புறத்தூய்மை பணியை மேற்கொள்வதிலும், மேற்கொள்வதிலும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் கொசு ஒழிப்பு களப் பணியாளர்களின் பங்கு மகத்தானது. ஆனால், இவர்களின் கஷ்டங்கள் களையப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், காலரா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணம் கொசுக்கள். இந்தக் கொசுக்களை ஒழித்துக் கட்டுவதற்காக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் கொசு ஒழிப்பு களப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களுடைய பணி என்பது, வீடு வீடாக சென்று காய்ச்சல் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், வீதிதோறும் கொசு மருந்து அடித்தல், கொசுவினால் உண்டாகும் நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவையாகும். கடந்த மூன்றாண்டு காலமாக கொரோனா பணியையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்குச் சென்று மருந்து மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொரோனா சிறப்பு வார்டுகளுக்குச் சென்று மருந்து மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை தங்களது உயிரை பணயம் வைத்து மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வரும் அவர்களின் பணி இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஓராண்டு பணி புரிந்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் இருக்கின்ற நிலையில், இவர்களது பணி நிரந்தரம் செய்யப்படாதது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில், ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்படும் சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்ற புகார்களும் வருகின்றன. இவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை எண் 317-ல், சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்ட கொசு ஒழிப்புப் பரிசோதகர்கள் பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்த வாக்குறுதி குறித்து தி.மு.க. அரசு வாய் திறக்காது இருப்பது வேதனை அளிக்கும் செயலாகும். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும், அதாவது தங்களது பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென்றும், முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொசு ஒழிப்பு களப்பணியாளர்களின் சேவையினையும், அவர்கள் நீண்ட நாட்கள் தற்காலிகமாக பணி புரிந்து வருவதையும், அவர்களுடைய ஏழ்மைத் தன்மையினையும் கருத்தில் கொண்டு, அனைத்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"' என்று குறிப்பிட்டுள்ளார்.