×

"இரட்டை டீசல் விலைக் கொள்கை" - ஜெ. ஆக்ஷனை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் ; நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

 

டீசல் விலை உயர்வினால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயத்தில் டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களான இந்திய ரயில்வே, அனல் மின் நிலையங்கள், இரும்பு ஆலைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கான டீசல் விலை 97 ரூபாய் 49 காசு என்றும், சில்லறை விற்பனைக்கும் மொத்த கொள்முதலுக்கும் இடையேயான வித்தியாசம் கிட்டத்தட்ட 6 ரூபாய் என்றும், இந்த விலை உயர்வு காரணமாக, தமிழ் நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போது, பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல்,  அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பினைத் தவிர்க்க டீசலை வெளிச் சந்தையில் நிரப்ப மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார் என்பதை  சுட்டிக்காட்டி,  ஆட்சியில் இல்லாதபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திமுக, தற்போது மொத்த கொள்முதல் டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தியும், இதனைக் கண்டித்து அறிக்கையும் விடவில்லை, விலையைக் குறைக்கவும் கோரிக்கை வைக்கவில்லை. ஒருவேளை வருவாய்க்காக இரட்டை விலைக் கொள்கையை திமுக வரவேற்கிறது போலும்! திமுகவின் இந்த 'இரட்டை நிலைப்பாடு' அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏற்கெனவே ஓய்வூதியப் பலன்களுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்ற சூழ்நிலையில், இந்தவிலை உயர்வு, காத்திருப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமோ என்றஅச்சம் ஊழியர்களிடையே நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இரட்டை டீசல் விலைக் கொள்கை குறித்த திமுகவின் நிலைப்பாட்டினை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டி, அவற்றில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அதிமுக  சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.